சில நாட்களுக்கு முன் வரை எனை நான் ஒரு Agnostic (கடவுளின் இருப்பை ஏற்கவும் மாட்டாத மறுக்கவும் முடியாத ஒரு நிலை) என்றே அடையாளப்படுத்தி கொள்ள விரும்பினேன், GOD DELUSION (கடவுள் எனும் திரிபுணர்வு) எனும் புத்தகத்தின் அறிமுகம் கிடைக்கும் வரை. ’எந்த புத்தகத்தை படித்தாலும் நமக்குள் இருப்பது தான் எழுதியிருக்கிறது’ என்றார் நகுலன். ஆனால் நமக்குள் இருப்பதை வெளிக்கொணர, நம்மை நாமே அறிந்து கொள்ள ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அந்த வகையில் ரிச்சர்ட் டாகின்ஸின் இந்த புத்தகம் என்னை பற்றிய என் புரிதலுக்கு மிக முக்கியமான ஒன்றென கருதுகிறேன். இந்த கட்டுரையை நிச்சயம் ஒரு விமர்சன பார்வையாக நான் எழுதவில்லை. அது அந்த புத்தகத்திற்கு இழைக்கும் இழுக்கென கருதுகிறேன். மாறாக அந்த புத்தகம் எனை பாதித்த விதத்தையும் என்னுடைய உள்ளார்ந்த் புரிதலையும் பதிவு செய்வதே இதன் நோக்கம்.
நாத்திகத்தின் நிலைப்பாட்டிற்குள் நுழையும் முன் Agnostic நிலைப்பாடு குறித்து பேச வேண்டியது அவசியம், முக்கியமாக நான் ஒரு முன்னால் Agnostic என்பதால். Agnostic நிலைப்பாடுடையவர் இருவகைப்படுவர். முதலில், தற்காலிகவாதிகள். இவர்கள் தேடல் படலத்தில் இருப்பவர்கள். எந்த ஒரு முடிவும் எடுக்க, போதிய ஆதரங்களுக்காக காத்திருப்பவர்கள். இந்த நிலை பொதுவாக நாத்திகத்தின் முன்னோட்ட நிலையே ஆகும். இரண்டாவது, கொள்கைரீதியிலான அக்னாஸ்ட்க்குகள். இவர்கள் நிலை ஆத்திக நிலையினும் ஆபத்தானது, ‘மதில் மேல் நிரந்தரமாகவே நின்று விட்ட பூனை போல’. ஆன்மிகத்தில் மட்டும் அல்ல, இந்த பொது நிலை எந்த தளத்திலும் ஆட்டு மந்தையில் மற்றுமொரு ஆடாக ஒருவனை ஆக்கிவிடக்கூடியது.
இப்போது நாத்திகம்!!!
பிறர் உணர்வையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது என்றே பொருள் கொள்ளப்படுகிறது பெரும்பாலும். ஆன்மீகவாதிகள், எந்த மதத்தினராயினும் சரி, தெளிவாக திட்டமிட்டு மதம் எனும் கருத்தை வடிவமைத்திருக்க வேண்டும். எந்த வகை மாற்றுக்கருத்தையும், அவமானபடுத்தும் செயலாகவும் பெருங்குற்றமாகவும் தோன்றும் வண்ணம் நமது அன்றாட வாழ்வில் மதத்தினை பிணைத்து வைத்தது அவர்கள் மார்தட்டி கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே.
நாத்திகவாதம் என்பது வெறும் மதத்தின்பால் நம்பிக்கை இழப்பு மட்டும் அல்ல. மாறாக, குவிந்து கிடக்கும் அறிவியல் ஆதாரங்களை கொண்டு உலகின் இயங்கியல் குறித்து பெறப்படும் ஒரு தன்மையான புரிதலுணர்வே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சார்லஸ் டார்வின் என்பவரால் பரிணாமவள்ர்ச்சி (டார்வினிசம்) எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. இரு நூற்றாண்டுகள் கழிந்தும், பல நேரங்களில் படித்த பலரிடம் கூட டார்வினிசம் பற்றிய குறைந்த பட்ச புரிதல் கூட இருப்பதில்லை என்பது விநோதமாகத் தோன்றலாம். அதையும் விட விநோதமான விடயம், டார்வினிஸம் அதன் வகையில் மற்றுமொரு அடிப்படைவாதக் கொள்கையாக பொதுவாக அறியப்படுவது. மதம் எனும் கருத்தை அடிமட்ட குடிமகனிடம் கொண்டு செல்ல, கோவில்கள், மதக்குழுக்கள், மடங்கள் என நிறுவப்பட்ட ஒரு வகையான INSTITUTIONAL SETUP உதவுகிறது. ஆனால் டார்வினிய கருத்தாக்கத்துக்கு, டெம்பிள்டன் (Templeton), இஸ்க்கான் (ISKCON) போன்று பணவரத்து மிகுந்த ஒரு பின்புலம் இல்லை என்பது கூட அக்கருத்து பெரும்பான்மை மக்களை இன்னும் அடையாமலிருக்க காரணமாக தோன்றுகிறது.
ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல், மதவிடயங்களில் உண்மையென்பது, நெடுங்காலம் பிழைத்து நிற்கும் சொந்த கதைகளும் போலிக்கருத்துக்களுமே ஆகும். அவ்வகையில், மனிதனுக்கு மதம் தேவைப்பட்டதற்கும் தேவைப்படுவதற்கும் முக்கிய சில காரணங்கள்,
- விளக்கம் (EXPLANATION) – உலகின் இருப்பியல் ரகசியம்
- தார்மீக வழிகாட்டி (EXHORTATION) – எது சரி? எது தவறு?
- ஆறுதல் (CONSOLATION) – ஒரு புலப்படாத தார்மீக ஆதரவு
- அகத்தூண்டுதல் (INSPIRATION) – துவண்டவர்க்கு உத்வேக ஊற்று
# - விளக்கம்
பரிணாம வளர்ச்சி எனும் கருத்தாக்கம் உலகின் இருப்பியலை மதபோதனைகளை காட்டிலும் தெளிவாக துள்ளியமாக விளக்குவதாகும். இந்த கருத்தை எதிர்கொள்ள பல மேலைநாட்டு ஆன்மீகவாதிகள் வைக்கும் வாதம், கண் போன்ற மிக சிக்கலான மனித உறுப்புகளின் உருவாக்கம் குறித்ததாகும். பரிணாம வளர்ச்சி பற்றி அவர்கள் கூறுவதும் பரப்புரை செய்வதும் இங்கே அடிகோலிடப்பட வேண்டியவை. அவர்களை பொருத்த மட்டில் பரிணாம வளர்ச்சியென்பது தற்செயலாக நடக்கும் ஒரு வேதிவினை (மூலக்கூறுகளின் எதேச்சயான சேர்மம்). இத்தகைய சிக்கலான நிகழ்வுக்கான புள்ளியியல் நிகழ்தகவு (STATISTICAL PROBABILITY) மிக மிக குறைவு. ஆதலால், இத்தகைய நிகழ்வுகளெல்லாம் தானாகவே நிகழ முடியாது, நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் (நிகழ்த்துபவர்-கடவுள்).
ஆனால் டார்வினிசத்தில் குறைந்தபட்ச அறிவுள்ளவர் கூட “தற்செயலான வேதிவினை” எனும் கருத்தை முன்வைப்பதில்லை. பரிணாமம் என்பது சிறிது சிறிதாக ஒவ்வொரு உயிரிக்கும் அதன் சூழலுக்கும் இடையிலான செயலெதிர்ச்செயலால் (INTERACTION) செலுத்தபடுவதாகும். ஒட்டகசிவிங்கியின் நீண்ட கழுத்து ஓரிரவில் அடைந்த மாற்றம் அல்ல. பல்லாயிரம் வருடங்களாக உயர கிடக்கும் தாவர இலைகளை உண்ண முயன்று சிறுக சிறுக மாற்றமடைந்து இன்று பிரம்மாண்டமான பரிணாம வளர்ச்சிபெற்று தோன்றுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொல்லுயிரெச்சங்கள் (FOSSILS) உறுதிப்படுத்துவதும் இதனைத் தான். நிச்சயமாக ‘கடவுள்’ எனும் விளக்கத்தை காட்டிலும் இது பன்மடங்கு தர்க்கரீதியானது என்பதை இன்றைய அறிவியல் ஆதாரங்கள் மிக தெளிவாக காட்டுகிறது.
இத்தனை ஆதரங்களையும் புறந்தள்ளிவிட்டு ’கடவுள் படைத்தார்’ என்பவர்களுக்கு எம் கேள்வி, அந்த கடவுளை படைத்தது யார். இது மிகப் புராதனக் கேள்வியாயினும் தெளிவான பதிலை எந்த ஆன்மிகவாதியும் அளிப்பதில்லை. அத்தகைய கடவுளின் நிகழ்தகவு (PROBABILITY) இன்னும் இன்னும் குறைவாகிவிடுகிறது. நாம் தெரிந்த ஒரு விடயத்தை தெரியாத ஒன்றை கொண்டு விளக்க முற்படுவது, நிலைமையை மிகச் சிக்கலாக்கி விடுகிறதே தவிற எவ்வித தெள்ளிய நிலைக்கும் நம்மை இட்டு செல்வதில்லை. அறிவியல் ஒவ்வொரு முடிச்சுக்களாக அவிழ்க்க அவிழ்க்க கடவுளின் இராட்சியம் குறுகிகொண்டே போவது தான் நிதர்சனம், ஒரு புள்ளியாக குறைக்கப்படும் வரையில்.
பிரபஞ்சம், அவதாரங்களும் தேவதூதர்களும் சொன்னதினும் மிக மேன்மையானது. அதனை மதம் எனும் குறுகிய வட்டத்தின் எல்லைக்குட்படுத்துவது அதனை அவமானபடுத்துவதே ஆகும்.
# தார்மீக வழிகாட்டி (EXHORTATION)
எது சரி? எது தவறு? என்பது எவராலும் முக்காலத்திற்கும் வரையறுக்க முடியாத ஒன்று. வரையறுக்க முற்படுவது அறிவீனம். தார்மீகம் (MORALITY) என்பதே அரூபமானது (FORMLESS). தார்மீகத்துக்கான வரையறை காலத்துக்கு காலம் மாறுபடக்கூடியது. ஐம்பதாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம் இன்று குற்றமாக பார்க்கபடலாம். சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன் அடிமைகள் வைத்திருப்பதென்பது அமெரிக்கர்களுக்கு (வெள்ளையர்) சாதாரணம். இன்றோ நிலை வேறு. அடிமை முறை என்பது அவர்களே வெட்கிக்குனியும் வரலறாகி விட்டது. ’மகாத்மா’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட காந்தியின் அபகீர்த்தியான பிரம்மச்சர்ய பரிசோதனை (பன்னிரண்டு வயதேயான மனுவுடன்), இன்றைய சூழலில் ஏற்கமுடியாதது, வெறுக்கப்படுவது.
நூற்றாண்டு காலத்திலேயே இத்தனை தார்மீக மாற்றம் கொள்ளும் மனித இனம், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதங்களை தார்மீக வழிகாட்டியாகக் கொள்வதெனும் தர்க்கத்தை எள்ளி நகைப்பதை தவிற வேறொன்றும் செய்வதற்கில்லை.
உலகின் பல மதங்களும் பொதுவாக கொண்டிருக்கும் சில கொள்கைகளை வரிசைப்படுத்தினால், துருத்திக்கொண்டு நிற்கும் முதல் விடயம், பெண் வெறுப்பு (MISOGYNY). இந்து மதம் விதவைகளுக்கு பெருந்தன்மையுடன் அளித்த விருப்பத்தேர்வு (CHOICE) மூன்று. உடன்கட்டை ஏறுதல், குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் இறந்த கணவனின் சகோதரனை மணத்தல் அல்லது சந்நியாசம் புகுதல், அது பாலிய விவாகம் கண்ட எட்டு வயது பெண்ணாயினும் சரி. இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி வரை இவை மிகவும் கறாராக பின்பற்றபட்டது. (இன்றைய “முற்போக்கு” சூழலிலும் விதவை மறுமணமும், கணவனை விட்டு பிரிந்து வாழ்கின்ற பெண் வேறொருவரை மறுமணம் செய்வதும் அசாதரணமான ஒரு நிகழ்வேயாகும்). கிருத்துவமொன்றும் பெரிதாய் மதித்து விடுவதில்லை பெண்ணினத்தை. மேற்கத்திய பெண்கள், சில பத்தாண்டுகளுக்கு முன் வென்றெடுத்த சுதந்திரம், தவறாக அம்மதத்தின் தாராளமயமாக கருதப்படலாம். பல விவிலியக் கதைகள் சொல்வது வேறுவகையாக இருக்கின்றது. ஒரு கதையில் ஒரு பண்புள்ள மனிதர் தனது விருந்தாளியாக வந்த பாதிரியாரை(ஆண்), அந்த சோடோமைட் (ஓரினச்சேர்க்கையாளர்) கிராமத்து கும்பலிடமிருந்து காப்பாற்ற, தனது கன்னி ”பெண்களை” தானமாக கொடுக்க முன்வருகிறார். இது போல பல இடங்களில் இத்தகைய ஆணாதிக்க மனப்போக்கு விரவி கிடக்கிறது. இஸ்லாத்தில் பெண்கள் பற்றிய அடிப்படைவாத கொள்கைகளை பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இத்தகைய விடயங்களை தெரிந்துகொள்ளும் போது, மதத்தின் அடிப்படையான நோக்கம் ”அடக்கியாள்வது” என்பதையும் தாண்டி பல உள்நோக்கங்களுடன் வடிவமைக்கபட்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. இந்த விளக்கங்களை தாண்டியும் மதம் ஒரு தார்மீக வழிகாட்டி என தர்க்கம் செய்பவர்க்கு ஒரு தகவல். ஒருவன் திருடாமல், கற்பழிக்காமல், அடுத்தவனை ஏமாற்றாமலிருக்க ஒருவனுக்கு கடவுள் மேல் இருக்கின்ற பயமும் மதங்களின் கோட்பாடுகளும் தான் காரணமெனில் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். நம்முடைய தார்மீக நிலை என்பது ஒருவருக்கு மற்றொருவர் செய்யும் ‘கைமாறு” என்பதிலேயே விதைகொண்டிருக்கிறது. நமது மரபணுவின் நிலைத்திருத்தலுக்கான (SURVIVAL OF GENES) போராட்டமே பரிணாமத்தை செலுத்தும் விசை. அதன் ஒரு பகுதியே நமது பிள்ளைகளையும் அவர்கள் பிள்ளைகளையும் நாம் நேசித்து அரவணைக்க காரணம். பாலுறவு என்பது இதற்கான அடிப்படை காரணி என்பதாலேயே அதனை நம் உடல் இன்பமென உணர்கிறது.
# ஆறுதல் – அகத்தூண்டுதல்
மதத்தின் ஆறுதல் முகத்தையும் அகத்தூண்டுதல் முகத்தையும் பார்க்குமுன் அதன் சில கோர முகங்களை பார்க்க வேண்டியது மிக முக்கியம். பல மதங்களில் கொடும்பாவமாக கருதப்படுகிற இரு விடயங்கள்.
முதலில் கருக்கலைப்பு.
கருக்கலைப்பு குறித்து பல மதங்கள் எதிர்கருத்தையே கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, கருக்கலைப்பு செய்யும் மருத்தவர் ஒருவர், அடிப்படைவாத கிருத்தவன் ஒருவனால் சுட்டுக் கொள்ளப்பட்டார். வலியை உணரமுடியாத (நரம்பு மண்டலம் முழு வளர்ச்சியடையாத) கருவை கொல்லுவதை தடுக்க, வலியை உணர முடிகிற ஒரு குடும்பத்தை ஆதரிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள ஒரு மனிதனை கொல்லுவதற்கான நியாயத்தை மதவாதம் மட்டுமே கொடுக்கமுடியும். குழந்தை வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது, தீவிர உடல் வேதனையை அனுபவிக்க வேண்டிய அந்த பெண் தானே தவிற மதவாதிகள் அல்ல.
அதே போல ஓரினச்சேர்க்கை (HOMOSEXUALITY) ஒரு மகாபாவமாக எல்லா மதங்களும் சொல்லுவது. எய்ட்ஸ் நோய் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கடவுள் அளித்த தண்டனை என்று கூறுபவர்களும் உளர். அப்படியெனில், எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தை என்ன, பூர்வ பிறவியில் விதைத்த பாவத்தின் பலனை இப்பிறவியில் அறுவடை செய்கிறதா. இப்படி ஒரு பொய்யை நம்பவைக்க பல பொய்கள் சொல்லப்பட்டு, இன்று மதம் ஒரு சிக்கலான சிலந்தி வலையாக நம் முன் நிற்கிறது. ஒருவருடைய பாலியல் நடத்தை (SEXUAL ORIENTATION) என்பது மூன்றாவது மனிதனை பாதிக்காத அளவில், அவரவரின் தனிப்பட்ட தேர்வு என்பதைக்கூட உணரமுடியாத அளவுக்கு மதம் நம் கண்களை கட்டி போட்டிருக்கிறது.
மனித வரலாறு நெடுகிலும் மதப்போர்கள் நூற்றாண்டு காலங்களுக்கு நடந்து வந்திருக்கின்றன என்பதை மறந்துவிடுவதற்கில்லை. இன்று வரையிலும் பல வெவ்வேறு பெயரிகளில் தொடர்ந்துகொண்டு தானிருக்கின்றன. கிட்டதட்ட மனிதகுலம் கண்ட எல்லா கோரமான போர்களும் படுகொலைகளும் மதத்தில் வேர்கொண்டவையாகவே இருந்து வந்துள்ளன.
இவ்வளவு பாதகங்களை கொண்ட மதத்தை காட்டிலும், ஒருவன் ஆறுதல் கொள்ள உண்மையான நண்பனின் தோள்களும், அக்கறையான பெற்றோரின் பாசமும், அன்பான மனைவியின் காதலும் எத்துனையோ வகையில் சாலச்சிறந்தது. அகத்தூண்டுதல் எனும் வாதமும் மேற்கூறிய பல காரணங்களால் நேரிடையாகவோ மறைமுகமாகவோ நிர்மூலமாகி விடுகிறது.
பொதுவாக கடவுளும் மதமும் நம் வாழ்வில் சந்தேகத்திற்கும் தர்க்கத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் நாம் உணர மறுக்கும் விடயம், இன்றைய கருத்துக்கள் அடுத்த தலைமுறையின் நம்பிக்கையாகவும் தொடரும் தலைமுறைக்கு கட்டளையாகவும் போய் சேர்கிறது என்பது. வெய்ன்பெர்க் சொன்னார், ”மதம் என்பது மனிதனின் கண்ணியத்துக்கும் தன்மானத்துக்கும் அவமதிப்பு. மதமின்றி, நல்லவர்கள் நல்லதை செய்து கொண்டும் தீயவர்கள் தீயவற்றை செய்து கொண்டும் தான் இருப்பர். ஆனால் ஒரு நல்லவனை தீயவற்ற செய்யவைக்கவல்லது மதம் மட்டுமே”. கடவுளும் மதமும் ஒரு சாதரண குடிமகன் பார்வையில் உண்மை, படித்து தெளிந்தவன் பார்வையில் ஏமாற்றுவேலை, ஆள்பவன் பார்வையில் பயனுள்ள ஒரு கருவி. இதனை பிரக்ஞை பூர்வமாக உணராத வரையில் இந்த மாய வலைகளை அறுத்தெரிவது இயலாது.