Blood cancer Treatment for a friend

Thursday, January 28, 2010

முதல் அனுபவம்: My experience in my first company!

14-July-2009..
இன்றுடன் ஓராண்டு முடிந்து விட்டது நான் பணிக்கு சேர்ந்து..
எனக்குள் பல மாற்றங்கள்..
- மனம் சொல்வதை செய்து பல நாட்கள் ஆகிறது
- பல முறை தவறான கருத்துக்களுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிலை.. (ஆரம்பத்தில் மனம் விரும்பாமல், இன்று மனம் கண்டு கொள்ளாமல்)
- மனோதத்துவ ரீதியில் பலம் பெற்றிருக்கிறேன் என்று சொல்லலாம்.
அழுத்தமான சில வார்த்தைகளுக்கு, நாளெல்லாம் வருந்துபவனாக இருந்ததாக ஞாபகம்.. இன்று நான் தவறே செய்திருந்தாலும் அதனை பூசி மெழுக பழகி கொண்டிருக்கிறேன்.. இன்னும் இது தொடர்ந்தால், இரண்டொரு வருடங்களில், தொழிற்சாலைகளுக்கே உரிய இந்த பிரத்யேக கலையில் விற்பன்னராகி விடலாம்..

எத்தனை விதமான மனிதர்கள்.. ஒரே மனிதனிடம் எதனை வகையான வெளிப்பாடுகள்.. எந்த வகையில் அவன் தன்னை வெளிக்காட்டி கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கூட அந்த சூழ்நிலைக்கே சொந்தம்!!
இலக்கு ஒன்று தான்.. "வேல முடியனும்".. கெஞ்சி பெறலாம்..அதட்டி பெறலாம்.. அறிவுரை சொல்லலாம்.. அழுதும் கூட விடலாம்.. முக்கியமாக உன் வேலையை எப்போது நீ அடுத்தவன் மூலமாக பெறுவதில் வெற்றி பெற்று விடுகிறாயோ அப்போதே நீ நிர்வாகத் திறன் கொண்டவன் ஆகிவிடுவாய்..(A typical manager).. எவ்வளவு நேரத்தில் என்பது, உன் திறனின் அளவு கோல்..
மொத்தத்தில் எல்லோரும் காரிய வாதிகள் தான்... "Emotional bond", பெறுகிற சம்பளத்திற்கு சிறிதாவது வேலை என்று மாதந்தோறும் தொழிலாளிகள் கூட்டத்தில் கூவுவதேல்லாம் வெறுமனே வார்த்தை அளவில் மட்டும் தான்..

சமீபத்தில் நிறுவனர் தினம் கொண்டாடினார்கள்.. இல்லை இல்லை கொண்டாடினோம்..
முப்பது வருடம் ஓடாக தேய்ந்த ஒரு தொழிலாளிக்கு மேடையில் நினைவு பரிசு தருகிறாராம் 'நிர்வாக இயக்குனர்'.. பரவா இல்லையே இங்கு இதெல்லாம் கூட நடக்கிறதே என்று நினைத்து முடிக்குமுன் நடந்தது என்னை இன்று வரை உறுத்தி கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.
அங்கே ஆர்வமுடன் ஆசையுடன் கை குலுக்க வந்தவன் கைகளை தொட்டு விடாத வண்ணம் விலகி நின்று கை கூப்பி வணக்கம் சொன்னார் பெருமதிப்பிற்குரிய 'நிர்வாக இயக்குனர்'.. அவரது எடுபுடி நயமாக அந்த தொழிலாளியை கீழே அனுப்பி வைத்தார் எவரும் கவனித்து விடாமல்..
மறந்து விட்டார்களா.. இல்லை தெரிந்தும் மறந்தது போல் நடிக்கிறார்களா.. இந்த கிழவனை போல் சில ஆயிரம் தொழிலாளிகளின் வியர்வை தான் அவனை அந்த இடத்தில கௌரவித்து நிற்க வைத்திருகிறது என.. அடக்கி வைக்க முடியாத கோபம், எனது உற்ற சில நண்பார்களிடம் அனல் கொண்ட வார்த்தைகளாக அன்று பூராவும் ஒலித்து கொண்டிருந்த கோபம், அன்று மாலை எனது மாத சம்பளம் வந்து விட்டதை பார்த்ததும் மறந்தே போய் விட்டது..

இனி "வழக்கம் போல் பள்ளி நடை பெரும்"!

ஆம்!! நிச்சயம் எனது உணர்வுகளை கொன்று தான் எனது ஒரு வருடத்தை கழித்திருக்கிறேன்... வெறும் பணம் தான் என்னை வழி நடத்தி வந்திருக்கிறது இந்த ஒரு வருடத்தில்..